அவனும் அவர்களும்

அவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவன். அவனுக்கு குறை என்று ஒன்றும் கிடையாது. நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு உணவு இருக்கிறது. மிக சுகமான வாழ்க்கையே அவனுக்கு. உரியவர்களுக்கு அன்பை கொடுப்பது, வேற்று நபர்களை கண்டவுடன் ஓனரிடம் சென்று எச்சரிப்பது மட்டுமே அவனின் பிரதான கடமை. ஓனர் மீது அவனுக்கு எப்போதும் பற்று அதிகம். ஆகையால் அந்த அன்பென்ற கடமை மட்டும் அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதை செய்வதில் அவன் எப்போதும் சலித்துக் கொண்டது கிடையாது…
அவன் ஒரு நாள் காலையில் மனதை புத்துணர்ச்சியாக்க ஓனருடன் சாலையில் வாக்கிங் செய்து கொண்டிருந்தான். அங்கு அவன் போலவே பயோலாஜிக்கலாக பிறந்த சிலரை அவன் பார்த்தான்.
அவர்கள் சாலையை வீடாக கொண்டவர்கள் .உணவு, குடிநீர் போன்று அனைத்துக்கும் திண்டாடி வருபவர்கள். பலரிடம் அடிபட்ட தழும்பையும் சுற்றியிருக்கும் அழுக்கால் சொரியையும் உடலெல்லாம் சுமந்து கொண்டிருப்பவர்கள் . உண்பவனின் தட்டையே வெறிக்க பார்த்து ஏமாந்து பழகியவர்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, தலைவிதி என நினைத்து சகித்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் மிகப்பெரும் கடமை, தங்களின் வாழ்க்கையை ஓட்டுவது தான்.
எனவே அவர்களின் கண்ணுக்கு அவன் பெரும் அன்னோன்யமாக தெரிந்தான். திடீரென்று அவனை பார்த்து ஒன்று சேர்ந்து கூட்டாக கத்த தொடங்கினர்.
சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த அவனோ! செய்யவதறியாமல் பயந்து, சோகமாய் ஓனருக்கு பின்னே சென்று பதுங்கினான்...
-க.கணேஷ்
கருத்துகள்