கவிதைகள்
வாழ்வியல் கவிதைகள் 1. பக்கத்து வீட்டு கிருஷ்ணனும், ராமனும் பெருமாள் கோவில் குடமுழக்கு விழாவில் வியர்வையுடன் பந்தல் போட்டு கொண்டிருந்தனர் 2. நயா பைசா இல்லாத என் வீட்டு வாசற் சுவரில், ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தார் கண் திருஷ்டி கணபதி 3. சாலையில் பரிதவிப்பவர்களை பார்த்து நக்கலாக ஆட்டம் போட்டன அரசியல் கட்சிக் கொடிகள்! 4. நான் கொழுப்பெடுத்தவன் என்பதற்காக தான் என்னை லட்டு என்று கொஞ்சினாயோ நீ... (திருப்பதி சம்பவம்) 5. என்ன மாயமோ மரத்தடி ஹோட்டலில் மட்டுமே, மனதிருப்தி எனும் பண்டம் கிடைக்கிறது 6. சோகமாய், சோர்வாய், கோபமாய், வெறுப்பாய் இருந்த முகங்களுக்கு மத்தியில் கைதட்டி மகிழ்வாய் ஓர் முகம் ரயில் பெட்டிக்குள் நுழைந்தது! 7. அனைவராலும் கொட்டப்பட்டு அன்பு காட்ட ஆளின்றி ஏங்கிய சாலைக்கு... துடைப்பம் எனும் தன் கையால் தலைக்கோதி விட்டால் தூய்மை பணியாளர் ஒருத்தி. 8. எள்ளளவும் எந்த உயிர்க்கும் தீங்கு நினைக்க கூடாது, உயிர்களை கொன்று அதன் பலனை அனுபவிக்க கூடாது... என்று சபையில் ஆக்ரோஷமாக கர்ஜித்தால் பட்டுப்புடவைக்காரி. -க.கணேஷ்